வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கு வேட்டை ஆரம்பம்! ஜனாதிபதி தரப்பு தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன.

ஆனால், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 121 வாக்குகள்தான் கிடைத்தன.

இதனால் ஒருவேளை பட்ஜட் தோல்வியடைந்துவிடுமோ என்று ஜனாதிபதி தரப்பு அஞ்சுகின்றது.

அரசுக்குள்ளும் சிலர் அமைச்சுப் பதவிகள் கேட்டு ரணிலுடன் முட்டி மோதுவதால் அவர்கள் இறுதி நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற அச்சம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் வாக்கு வேட்டையில் ஜனாதிபதி தரப்பு ஈடுபட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.