கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா ஒத்துழைப்பு வழங்காவிடின் ‘கோ ஹோம் சைனா’ போராட்டம் – சாணக்கியன்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை சீனா திட்டமிட்ட வகையில் கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது. கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் ‘கோ ஹோம் சைனா’ போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் என்பதை சீன அரசாங்கத்திற்கும், கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கும் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடன் மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊழியர் மட்ட பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டேன்.இது மிகவும் முக்கியமானது.நான் இலங்கை மக்கள் சார்பாகவே சபையில் உரையாற்றினேன்,ஆனால் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இவ்விடயத்தில் எனது டுவிட்டர் கணக்கை இணைத்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பு சீனா கொண்டுள்ளது.பொருளாதாரத்தில் சீனா முன்னிலையில் உள்ளது.7.4 பில்லியன் டொலர்களை இலங்கை சீனாவுக்கு கடனாக வழங்க வேண்டும்.22 மில்லியன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை கொண்டுள்ள சீனா இலங்கையின் உண்மையான நண்பனாயின் எரிபொருள்,மற்றும் உணவு பொருட்களை வழங்குவதை விடுத்த சீனா இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,அதுவே உண்மையான ஒத்துழைப்பாகும்.

22 மில்லியன் இலங்கை மக்கள் இனம்,மதம் என்ற அடிப்படையில் வேறுப்பட்டு இருக்கலாம். ஆனால் நாடு எனும் போது ஒன்றிணைந்து செயற்படுவார்கள். பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்து கடன் வழங்கி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியள்ளது.

நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் அதற்கு நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என்பதை சீன அரசாங்கத்திற்கும். இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.