திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது; யாழ். பத்திரிசியார் வீரர்களுக்கு தங்கப் பாதணி, தங்கக் கையுறை

அகில இலங்கை பாடசாகைளுக்கு இடையில் நடத்தப்பட்ட திபப்பரே.கொம் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி சம்பியனானதுடன் யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.

20 பாடசாலைகள் 5 குழுக்களில் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் இருவர் தங்கப் பாதணியையும் தங்கக் கையுறையையும் வென்றெடுத்து யாழ். மண்ணுக்குப் பெருமை சேர்த்துக்கொடுத்தனர்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியிடம் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கடும் சவாலை எதிர்கொண்ட புனித சூசையப்பர் கல்லூரி கடைசிக் கட்டத்தில் திறமையாக விளையாடி 5 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று திபப்பரே.கொம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் மாத்திரமே ஆன நிலையில் மத்திய கல்லூரி வீரர் செபஸ்தி அருள் மிக அற்புதமாக செயற்பட்டு எதிரணியின் பின்கள வீரர்களைக் கடந்து அலாதியான கோல் ஒன்றைப் புகுத்தி தனது அணியை முன்னிலையில் இட்டார்.

அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க பல தடவைகள் யாழ். மத்திய கல்லூரி வீரர்கள் முயற்சித்த போதிலும் அவர்களது குறிகள் தவறிப் போயின.

இதனிடையே அவ்வப்போது கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை புனித சூசையப்பர் வீரர்கள் தவறவிட்டனர்.

எவ்வாறாயினும் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் வீரர் பெத்தும் கிம்ஹான, த்ரோ இன் பந்தை தனது தலையால் முட்டி கோல் நிலையை 1 – 1 என சமப்படுத்தினார்.

அடுத்த 6ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பெற்றுக்கொண்ட பந்தை மிகவும் இலாவகமாக நகர்த்திச் சென்ற கிம்ஹான தனது 2ஆவது கோலைப் போட்டு புனித சூசையப்பர் அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையைத் தொடர்ந்து ஆட்டம் தொடர்ந்தபோது இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. போட்டியின் 67ஆவது நிமிடத்தில் யாழ். மத்திய வீரர் நிஷாந்த் பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணியினராலும் எதிரணிகளின் மத்திய களத்திற்கு அப்பால் பந்தை நகர்த்திச் செல்ல முடியாமல் இருந்தது.

எவ்வாறாயினும் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் யாழ். மத்திய கல்லூரி கோல் காப்பாளர் அவரது நிலையிலிருந்து முன்னோக்கி நகர்ந்திருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட புனித சூசையப்பர் வீரர் மார்க் அண்ட்றூ பந்தை உயர்த்தி உதைத்து தனது அணியின் 3ஆவது கோலை போட்டார்.

போட்டி முழுநேரத்தைத் தொட்டபோது ஏய்டன் பெரேரா மிக சாமர்த்தியமாக தனி ஒருவராக பந்தை நகர்த்தி பெனல்டி விளிம்பிலிருந்து அலாதியான கோல் போட்டு புனித சூசையப்பர் கல்லூரியை 4 – 2 என முன்னிலையில் இட்டார்.

உபாதையீடு நேரத்தின் 4ஆவது நிமிடத்தில் த்ரோ இன் பந்தை தலையால் முட்டி மார்க் அண்ட்று தனது 2ஆவது கோலைப் போட புனித சூசைப்பர் 5 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.

புனித பத்திரிசியார் மூன்றாம் இடம்

சுகததாச  விளையாட்டரங்கில் காலையில் நடைபெற்ற போட்டியில் கிண்ணியா அல் அக்சா  கல்லூரியை 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக ஏ. அன்ரன் ஜெரோம் 2 கோல்களையும் ஏ. லியோ, எஸ். சைனுஜன், தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த வீரராகத் தெரிவான வீ. ரோஹித் ஆகியோர் தலா ஒரு கோலை புகுத்தினர்.

இந்த சுற்றுப் போட்டியில் கோல்காப்புகளுக்கு இடையில் மிகச் சிறப்பாக செயற்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏ. ஆர்னல்ட் அதி சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை விருதை வென்றெடுத்தார்.

அத்துடன் சுற்றுப் போட்டியில் 12 கோல்களை மொத்தமாகப் போட்ட இதே கல்லூரியைச் சேர்ந்த அன்டன் ஜெரோம் அதிக கோல்கள் போட்டதற்கான தங்கப் பாதணி விருதை வென்றெடுத்தார்.

இறுதிப் போட்டி நாயகனாக புனித சூசையப்பர் வீரர் தேஷான் துஷ்மிக்கவும் தொடர்நாயகனாக அதே கல்லூரி வீரர் பெத்தும் கிம்ஹானவும் தெரிவாகினர்.