முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணத்தில் சந்தேகம்! மனைவி கோரிக்கை

அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு முன்னிலையில் இன்று (13) இடம்பெற்ற மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

ரெஜினோல்ட் குரேயின் முன்னாள் தனிச் செயலாளர் ஜே.எம். சோமேசிறியின் சாட்சியத்தின் பின்னர், அவர் அவ்வாறு கோரினார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க உட்பட நால்வருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னரே ரெஜினோல்ட் குரே நோய்வாய்ப்பட்டதாக ஜே.எம். சோமேசிறி சாட்சியமளித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், களுத்துறை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீஅந்த அமரரத்ன தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு
முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் காலமானார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.