சரத் பொன்சேகா வெளியிட்ட இரகசியம்! தமிழர்களுக்கு துரோகம் கூறும் ஆனந்தசங்கரி

உண்மைகள் அழிவதில்லை! என்றோ ஒரு நாள் வெளிவந்தே ஆக வேண்டும் என்பதே உலகளாவிய ரீதியில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

பல உண்மைகள் வெளிவர வேண்டியவையாக இருந்தும் திட்டமிட்ட சிலரின் செயலால் சில மறைக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகின்ற சரத் பொன்சேகா மார்கழி மாதம் மூன்றாம் திகதி தன் வீரசெயல்களில் ஒன்றாக ஒரு பெரும் இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

பல விடயங்களில் ஒன்றாகிய யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்ததாகவும், அதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

சரி பிழை ஒருபுறமிருக்க வெளிப்படையாக அவர் கூறியதை பாராட்ட வேண்டும். அரசியல் புரிந்தவர்களுக்கு இது பெரிய புதினமல்ல. ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தன் ஐயா தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரக்கக் கூறிய கருத்து ‘எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.’ என பொன்சேகா யுத்தம் முடிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேளையில் சம்பந்தனால் உரக்கக் கூறப்பட்டது.

நான் கூறும் விடயங்கள் பல தீர்க்க தரிசனமாக அமைந்துள்ளன. தமிழரசுக் கட்சிக்கு மீள உயிர் கொடுத்த சம்பந்தன், சேனாதிராஜா போன்றவர்கள் தந்தை செல்வநாயகத்திற்கும் பார்க்க தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

நாடாளுமன்றத்தில் சிலரால் கூறப்பட்டது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பும், நான் கூறிவருவது போல தமிழரசுக் கட்சியும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கூறிவரும் கருத்திற்கு வலூவூட்டக் கூடிய உண்மைகள் பல வெளிக்கொண்டுவரவுள்ளேன்.

அதற்கு முன்பே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எல்லாவற்றையும் கலைத்து விடுவதே சிறந்ததாகும். என்ன நலனை கருத்தில் கொண்டு பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் என இன்றைக்கேனும் சம்பந்தன் வெளிவிடுவாரா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.