ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பவர்கள் மக்களின் உரிமையை காலால் உதைப்பதற்கு சமமாகும் – நீதி அமைச்சர்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் அனைவரும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் சேவைக்கு பாராளுமன்றத்துக்கு உண்மையாக வந்திருப்பவர்கள் யாரும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க முடியாது.

எதிராக வாக்களிப்பவர்கள் மக்களின் உரிமையை காலால் உதைப்பதற்கு சமமாகும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (16) நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு காலத்துக்கு காலம் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1950 காலப்பகுதியில் ஊழல் மோசடி சட்டம் இருந்தது.

அது தொடர்பான திணைக்களம் இருந்தது. அது வெற்றியளிக்காததால் 1994இல் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கொண்டுவரப்பட்டது.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு அந்த ஆணைக்குழு போதுமானதல்ல என முழு நாடும் தெரிவித்து வந்தது. அந்த ஆணைக்குழுவினால் சாதாரண இலஞ்ச ஊழல் மோசடிக்காரர்களே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் பாரிய மோசடி காரர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

அதனால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தை சரி செய்துகொண்டு நாங்கள் தற்போது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தோம்.

இந்த சட்டமூலத்துக்கு சிலர் ஆதரவு சிலர் எதிர்ப்பு. பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் சிலர் ஆதரவு சிலர் எதிர்ப்பு. அதேபோன்று எதிர்தரப்பிலும் சிலர் ஆதரவு சிலர் எதிர்ப்பு. எதிர்க்கட்சி பொதுவாக மோசடிக்கு எதிர்ப்பு.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது அனைத்து அரசியல்வாதிகளும் மோசடிக்கு எதிராகவே செயற்படுவார்கள். ஆனால் அவர்கள் ஆளும் தரப்புக்கு சென்றால் அந்த எதிர்ப்பு இல்லாமல் போகிறது.

இன்று அரசியல்வாதிகளை மோசடிகாரர்கள் என்கிறோம். ஆனால் அரசியல்வாதிகள் அந்த பதவியை பெற்றுக்கொள்ள வரும் பாதையும் மோசடியாகும். தேர்தல் முறைமையே மோசடிமிக்கதாகும். அதனால் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகின்றபோதும் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது.

2015இல் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இந்த திருத்தத்தை கொண்டுவந்தோம். என்றாலும் அது இடைநடுவில் கைவிடப்பட்டது. இருந்தபோது நாங்கள் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் செலவு வரையறை சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கிகரித்துக்கொண்டோம். இதன் மூலம் மோசடியை முற்றாக ஒழிக்க முடியாவிட்மாலும் சாதாரண அளவில் மோசடியை நீக்குவதற்கு இது சிறந்த சட்டமாகும் என அனைவரும் தெரிவித்தார்கள்.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதித்தோம். ஆனால் சட்டமூலத்துக்காக வாக்கெடுப்பு நடத்தும்போது எதிர்க்கட்சி எதிராக வாக்களித்தது. இவர்கள் ஊழலுக்கும் எதிர்ப்பு ஊழலை நிறுத்துவதற்கும் எதிர்ப்பு. அதற்கு எதிராக சட்டம் அமைப்பதற்கும் எதிராகவே இருக்கின்றனர். அதனால் இது எங்குசென்று முடிவடையக்கூடிய பிரச்சினை என்றுதான் புரியாமல் இருக்கிறது.

அதனால் தற்போது நாங்கள் ஆளும் தரப்பில் இருந்துகொண்டு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தோம். இரண்டு தினங்கள் விவாதித்தோம். 19ஆம் திகதி மூன்றாம் மதிப்பீட்டில் குழுநிலையில் திருத்தங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. இருந்தபோதும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் அனைவரும் ஆதரவளிக்கும் என எதிர்பாரக்கிறேன். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் சேவைக்கு பாராளுமன்றத்துக்கு உண்மையாக வந்திருப்பவர்கள் யாரும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க முடியாது. சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதானது மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வந்து தங்களின் சுயநல தேவைகளுக்கான பாதையை சரி செய்துகொண்டு, மக்களின் உரிமைகளுக்கு காலால் உதைப்பதற்கு சமமானதாகும் என்றார்.