இஸ்ரேல் காசாமீது பீரங்கித்தாக்குதல்!

காசாவின் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்குள் முழுமையான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னேற்படாக எல்லை அருகே உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காசாவிற்கு தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வடக்கு காசா எல்லைக்குள் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் வீரர்கள் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்து இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையின்போது, இஸ்ரேல் படையினர் ஏராளமான பயங்கரவாதிகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன.

இந்த நடவடிக்கை முடிந்ததும் இஸ்ரேல் படையினர் அங்கிருந்து திரும்பினர் என்று தனது எக்ஸ் பதிவில் இராணுவம் தெரிவித்துள்ளது.