குருந்தூர் மலை விவகாரம் -திருத்தத்துடன் புதிய கட்டளை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.

எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கப்பட்டுள்ளது .

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவு ஏற்படாத வகையில் பொலிசார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது .

குருந்தூர் மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரன் ஆகியோரும் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பில் பொலிசார் மன்றில் முன்னிலையாகினர் இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழக்கினுடைய தீர்ப்பை வழங்கினார் .

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இன்றையதினம் (19)குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் இன்றையதினம் (19) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்ற இன்றைய வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிடர் ஜெனரல் மற்றும் இரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர் .அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிடர் ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டு வருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர் .

அங்கு நிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றில் குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை நீதிபதி பிறப்பித்துள்ளார.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையில் . தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ம் திகதி கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கப்பட்டுள்ளது .